துறவு

திருக்குறள்:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும்
பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு
அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.

மு.வ உரை:
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும்
பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று
மனத்துக் கொள்க, அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண்
உபாயத்தை அம்மனத்தான் செய்க , விடாது வந்த பற்று விடுதற்கு. (கடவுள்
வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான்
பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது,
பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த
பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு
உபாயம் இதனால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன்
கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான
சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.

Translation:
Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,
Cling to that bond, to get thee free from every clinging thing.

ADVERTISEMENTS
Explanation:
Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.