கூடாவொழுக்கம்

திருக்குறள்:
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
வாழ்வாரின் வன்கணார் இல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.

மு.வ உரை:
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து,
துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம்
செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல் - வன்கண்மையையுடையார்
உலகத்து இல்லை. (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம் மறுமைக்கண்
தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்' என்று அறியாது ஈந்தாரை,
அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால்
அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு
முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின்
மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன
செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.).

மணக்குடவர் உரை:
நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.

Translation:
In mind renouncing nought, in speech renouncing every tie,
Who guileful live,- no men are found than these of 'harder eye'.

ADVERTISEMENTS
Explanation:
Amongst living
men there are none so hard-hearted as those who without to saking
(desire) in their heart, falsely take the appearance of those who have
forsaken (it).