கனவுநிலையுரைத்தல்

திருக்குறள்:
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு 
உயலுண்மை சாற்றுவேன் மன்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள்
உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும்
உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.

மு.வ உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும்
கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச்
சொல்வேன்.

சாலமன் பாப்பையா உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும்
கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச்
சொல்வேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(தூது விடக் கருதியாள் சொல்லியது, ) கயல் உண்கண் யான்
இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான்
இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவிடைக்
காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே
விரியச் சொல்வேன். ('கயலுண்கண்' என்றாள்,கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் -
காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும்,
சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும்
கருத்தால், 'சாற்றுவேன்'என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது
என்பது படநின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள்
கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.).

மணக்குடவர் உரை:
என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள
உறங்குமாயின் நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேனென்று
உறங்குகின்றதில்லையே. மன்- ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண்- பிறழ்ச்சி
யுடைய கண்.

Translation:
If my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I'll tell my loved one o'er.

ADVERTISEMENTS
Explanation:
If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.