குறிப்பறிதல்

திருக்குறள்:
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான்
பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும்
என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?.

மு.வ உரை:
யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை:
நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது.) யான்
நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது
இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் -
அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா
நிற்கும். (மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது
விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும்
உளர்.).

மணக்குடவர் உரை:
யான் தன்னைப்பார்க்குங்கால் தான் நிலத்தைப் பார்க்கும்;
யான் பாராத விடத்துத் தான்பார்த்துத் தோன்றாமை நகும். மெல்ல நகுதல்-
முகிழமுகிழ்த்தல்.

Translation:
I look on her: her eyes are on the ground the while:
I look away: she looks on me with timid smile.

ADVERTISEMENTS
Explanation:
When I look, she looks down; when I do not, she looks and smiles gently.